சோழர்கள் பற்றிய வரலாற்று படமான பொன்னியின் செல்வன் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்து நந்திவர்மன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தமிழ் மன்னர்கள் குறித்த படங்கள் எடுக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் பெரும் ஹிட் அடித்துள்ளது. சோழ ராஜ்யம் குறித்த இந்த படத்தை தொடர்ந்து பல்லவ ராஜ்யம் குறித்த ரகசியங்களை கொண்டு உருவாகியுள்ளது ‘நந்திவர்மன்’.

ஆதித்த கரிகாலன் போலவே மர்மமான முறையில் கொல்லப்பட்டவர் பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன். அவர் வஞ்சத்தால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. அதன்பின்னர் அவர் ஆண்ட பகுதி முழுவதும் புதைகிறது. அப்பகுதியை ஆராய்ச்சி செய்து நந்திவர்ம பல்லவன் குறித்த வரலாற்று ரகசியங்களை வெளிக்கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று முயல்கிறது.
ஆனால் அப்பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் துர்சம்பவங்கள் நிகழ்கின்றன. பொதுமக்களும் வெளியே வர அஞ்சுகின்றனர். அந்த மர்மம் என்ன? பல்லவ ரகசியத்தை கண்டறிந்தார்களா? என்பது சுவாரஸ்யமான படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் பெருமாள் வரதன் இயக்கியுள்ளார். சுரேஷ் ரவி, ஆஷா கவுடா, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரலாற்று கால படமாக இல்லாமல் தற்போதைய காலகட்டத்தில் வரலாற்றை தேடி செல்லும் சஸ்பென்ஸ் கதையாக அமைந்துள்ள நந்திவர்மன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.








