“இந்த உடான்ஸை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத”- சட்டையை கிழித்துக்கொண்டு பாரதிராஜாவுடன் சண்டை போட்ட எஸ்பிபி, ஆனா கடைசிலதான் ஒரு டிவிஸ்டு
இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரன், பாஸ்கரன் ஆகியோரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் அனைவரும் இணைந்து கச்சேரிகளுக்கு வாசித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை பலரும் அறிந்திருப்போம். அந்த சமயத்திலேயே பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் அவர்களுக்கு பரிச்சயமும் நட்பும் ஏற்பட்டது.
அதாவது எஸ்.பி.பாலசுப்ரமணியம் அக்காலகட்டத்தில் சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வந்தார். அவர் புட்டண்ணா கனகல் என்ற இயக்குனரின் திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடினார். அந்த சமயத்தில் புட்டண்ணாவிடம் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். ஆதலால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது.

ஒரு புறம் பாரதிராஜாவும் இளையராஜாவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஆதலால் எஸ்பிபியின் இசைக்குழுவில் இளையராஜாவையும் அவரது சகோதரர்களையும் சேர்த்துவிட்டார் பாரதிராஜா. அதன் பின் இளையராஜாவிற்கும் எஸ்பிபிக்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டானது. இவ்வாறு அவர்கள் நெருங்கிய நண்பர்களாக பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளையராஜா மற்றும் அவர்களது சகோதரர்கள் அடங்கிய எஸ்பிபி இசைக்குழு இசைக்கச்சேரி நடத்த சென்றது. அவர்களுடன் பாரதிராஜாவும் இணைந்துகொண்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அன்று அவர்கள் அனைவரும் மாலை கச்சேரிக்காக மதிய நேரமே தங்களை தயார்படுத்திக்கொண்டிருந்தனர். அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததும் அந்த பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டல் அறையில் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போது பாரதிராஜா திடீரென, “என்னடா பெரிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சினிமாவுல பாடிட்டா, நீ பெரிய பிடுங்கியா?” என எஸ்பிபியை பார்த்து கத்தத் தொடங்கினாராம்.

அதற்கு எஸ்பிபி, “இந்த கத்துற வேலை எல்லாம் இங்க வேணாம். நாம கச்சேரி நடத்த வந்திருக்கோம். மாணவர்கள் முன்னால இப்படி எல்லாம் தகராறு பண்ணாத” என கண்டிக்க, அதற்கு பாரதிராஜா, “பெரிய இவனா நீ?” என கை ஓங்கிவிட்டாராம்.
எஸ்பிபியும் பதிலுக்கு கை ஓங்க இருவரும் சட்டை கிழியும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்களாம். அந்த காலகட்டத்தில் எஸ்பிபி மிகவும் பிரபலமான பாடகர், ஆனால் பாரதிராஜா அந்த காலகட்டத்தில் உதவி இயக்குனர் மட்டுமே. ஆதலால் எஸ்பிபி யாரோ ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார் என அங்கிருந்த மாணவர்கள் அந்த சண்டையை பார்க்க கூடிவிட்டார்களாம். இளையராஜாவும் அவரது சகோதரர்களும் சண்டையை தடுத்து நிறுத்த பார்த்தும் பயனில்லாமல் போயிருக்கிறது.
இருவருக்குள்ளும் சண்டை உச்சத்தில் இருந்தபோது, திடீரென எஸ்பிபி, “சரி பாரதி, கச்சேரிக்கான வேலையை பார்ப்போம்” என்று சொல்லி பாரதிராஜாவின் தோளில் கைபோட, “சரி வா” என்று பாரதிராஜாவும் எஸ்பிபியின் தோள் மேல் கை போட இருவரும் நடந்து ஹாஸ்டல் அறைக்குள் சென்றுவிட்டார்களாம். இளையராஜாவும் கங்கை அமரனும் எதுவும் புரியாமல் முழித்துக்கொண்டிருக்க அதன் பின்தான் உண்மை என்ன என்று தெரிய வந்திருக்கிறது.

“மாலை கச்சேரி தொடங்கும் வரை பொழுதுபோகனுமே, அதுக்காகத்தான் சும்மா எங்களுக்குள்ளயே பேசி வச்சிக்கிட்டு ஜாலியா சண்டை போட்டுக்குட்டோம்” என்று எஸ்பிபியும் பாரதிராஜாவும் சிரித்துக்கொண்டே கூறினார்களாம்.