News
நான் சொல்ற மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்!.. இளையராஜா படத்தின் ப்ளானை மாற்றிய இயக்குனர்!..
நடிகர் தனுஷிற்கு சினிமாவிற்கு வந்தப்போதே இரண்டு பெரிய ஆசைகள் இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் ஒன்று ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி நடிக்க வேண்டும். மற்றுமொன்று இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதாகும்.
இந்த நிலையில் அதில் ஒரு ஆசை தற்சமயம் தனுஷிற்கு நிறைவேறியுள்ளது என்றே கூற வேண்டும். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.
இந்த திரைப்படம் எப்படியான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. ஏனெனில் இளையராஜாவின் மொத்த வாழ்க்கை கதையையும் ஒரே படமாக இயக்குவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்க திட்டமிட்டுள்ளார் அருண் மாதேஸ்வரன். இளையராஜாவின் சிறு வயது துவங்கி அவர் திரைத்துறைக்கு வருவது வரை முதல் பாகமாகவும், திரைத்துறைக்கு வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் இரண்டாம் பாகமாகவும் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி பார்க்கும்போது அன்னக்கிளி உன்ன தேடுதே என இளையராஜா இசையமைக்கும் காட்சிதான் முதல் பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வந்தாலும் கூட ரசிகர்களுக்கு முதல் பாகத்தின் மீதே அதிக ஆர்வம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏனெனில் சினிமாவில் இளையராஜாவின் வாழ்க்கை என்ன? அவர் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பது பலரும் அறியாத விஷயமாகும். இதனாலேயே முதல் பாகத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
