தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இருவரும் தங்களது ஆரம்ப காலங்களில் இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே என பல படங்களில் சேர்ந்து நடித்திருந்தனர். பின்னர் இருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் திரளவே தனித்தனியாக ஆரோக்கியமான போட்டியாளர்களாக படங்களை நடித்து வருகின்றனர்.
ஆனால் ரஜினியும், கமலும் திரும்ப சேர்ந்து படம் நடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் பல காலமாக ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ரஜினி, கமல் இணைந்து படம் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இருந்த நிலையில், ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன்தான் இந்த படத்தை இயக்கப் போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டர் இன்று மாலை 7.12க்கு வெளியானது. அடுத்த போஸ்டர் அப்டேட் நாளை காலை 12.7 க்கு வெளியாக உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கமல்ஹாசனின் பிறந்த தேதி 7, ரஜினிகாந்தின் பிறந்த தேதி 12. இந்த 7, 12 காம்போவை வைத்துதான் போஸ்டர் அப்டேட் நேரத்தை குறித்துள்ளனர். இன்று 7.12 க்கு வந்துள்ள போஸ்டர் கமல்ஹாசன் தொடர்பானது என்றும், நாளை 12.7க்கு வெளியாகும் போஸ்டர் ரஜினிகாந்தை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் 21ம் தேதியன்று மற்றுமொரு அப்டேட் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இயக்குனர் நெல்சனின் பிறந்த தேதி 21. அதனால் 21ம் தேதியன்று நெல்சன் தான் இந்த படத்தின் இயக்குனர் என்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






