Cinema History
முதல்நாள் கம்போசிங்கில் நடந்த அபசகுணம், “சோலி முடிஞ்சிச்சு” – இளையராஜாவின் கனவில் மண்ணை வாரிக்கொட்டிய சம்பவம்
மூன்று தலைமுறைகளாக இசையின் ராஜாவாக கோலோச்சுக்கொண்டிருக்கும் இளையராஜா, சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு பல இசைக்கச்சேரிகளில் வாசித்துக்கொண்டிருந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மூலம் இளையராஜாவிற்கு “அன்னக்கிளி” திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அமைந்தது.
முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இளையராஜாவின் புகழ் அதனை தொடர்ந்து மென்மேலும் வளர்ந்தது. ஆனால் “அன்னக்கிளி” திரைப்படத்தின் முதல் பாடல் கம்போஸிங்கின்போது ஒரு மிகப் பெரிய தர்மசங்கடம் நிகழ்ந்தது.
“அன்னக்கிளி” திரைப்படத்தின் பாடல் ஒலிப்பதிவு ஏ.வி.எம். ஆர்.ஆர். தியேட்டரில் தொடங்குவதாக இருந்தது. இளையராஜாவின் குருநாதரான ஜி.கே.வெங்கடேஷ், பஞ்சு அருணாச்சலம், “அன்னக்கிளி” படத்தின் இயக்குனரான தேவராஜ்-மோகன் ஆகியோர் ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்திருந்தனர்.
முதல் பாடல் பதிவிற்கு முன்பு பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒத்திகை மிகவும் திருப்திகரமாக முடிந்தது. அதன் பின் அனைவரும் ரெக்கார்டிங்கிற்கு தயாராக, இளையராஜாவிற்கோ கடும் வயிற்றுப்போக்கு. எனினும் முதல் பாடலுக்கான ரெக்கார்டிங்கை நல்லபடியாக முடித்துவிட வேண்டும் என்ற பயமும் பதட்டமும் அவருக்கு இருந்தது.
அங்குள்ள ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டராக கோவர்த்தனம் என்று ஒருவர் இருந்தார். முதல் பாடல் ரெக்கார்டிங்கை தொடங்குவதற்காக அவர், “ரெடி, ஒன் டூ த்ரி” என்ற சொல்லி முடித்த அந்த வினாடியில் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. அப்போது அங்கிருந்த ஒருவர், “இது விளங்குன மாதிரிதான்” என கூற, அது இளையராஜாவிற்கும் இசைக்குழுவினருக்கும் மிகவும் பதட்டத்தை உண்டு செய்துவிட்டது.
தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரர்கள், “ராசியே சரியில்லை, இதுக்குத்தான் இந்த ஆளை மியூசிக் டைரக்டரா போடவேணாம்ன்னு சொன்னோம்” என அவர்களுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டார்களாம்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மின்சாரம் மீண்டும் வந்துவிட்டது. மீண்டும் ரிகர்சல் பார்த்து டேக் போனார்கள். முதல் பாடல் வெற்றிகரமாக பதிவானது. அங்கிருந்தவர்களுக்கு மிகவும் திருப்திகரமாகவே இருந்தது. அதன் பின் தொடர்ந்து “அன்னக்கிளி” திரைப்படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. படம் வெளியான பிறகு பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. திரைப்படமும் அமோக வெற்றிப்பெற்றது. அதன் பின் இளையராஜா இசையின் ராஜாவாக மாறிப்போனார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்