
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓடிடி, திரையரங்க உரிமை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் ஜனநாயகன். விஜய் அரசியலில் நுழைந்து விட்ட நிலையில் இதுவே அவரது கடைசி படம் என கூறப்படுவதால் ரசிகர்களிடையே இந்த படத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் பொங்கலுக்கே வெளியாக வேண்டிய ஜனநாயகன், சென்சார் பிரச்சினைகளால் இன்னமும் வெளியாகாமல் உள்ளது.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் படத்தை உரிய காலத்தில் வெளியிட முடியாத சூழலில் ஓடிடி தளங்களும் தயாரிப்பாளர் தரப்பை நெருக்குவதாக படக்குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அப்படியும் படம் பிப்ரவரியில் கூட வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகிறது. இதனால் ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமைகளை பெற்ற நிறுவனங்கள் பேசிய தொகையிலிருந்து பாதியை மட்டுமே கொடுக்க முடியும் என்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் இது தயாரிப்பு தரப்பிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஜனநாயகன் ரிலீஸில் திடீரென ஏற்பட்ட இந்த பாதிப்பால் ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி, குறைந்தது ரூ.500 கோடி வசூலை கடந்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் லாபம் ஈட்ட முடியும் என பேசிக் கொள்ளப்படுகிறது கோலிவுட் வட்டாரத்தில்..




