ஒரு கவிஞருக்காக படத்தின் காட்சியை மாத்துன கதை தெரியுமா? எம்.ஜி.ஆர் செஞ்சிருக்கார்..
தமிழ் திரைப்பட உலகில் முடிச்சூடா மன்னனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றால் அந்த படத்தில் அனைத்து விஷயங்களும் அவருக்கு பிடித்த மாதிரிதான் இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆரிடம் யாராவது ஒருவர் தனது திறமையை நிரூபித்துவிட்டால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு ஒரு புதுமுகம் அறிமுகமானார். அப்போது தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் நல்ல பழக்கம் இருந்தது. வீரப்பன் ஒரு ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தபோது அங்கு எதார்த்தமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை சந்தித்தார்.

அப்போது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சில படங்களுக்கு மட்டுமே பாடல் வரிகள் எழுதியிருந்தார். அதனால் பெரும்பாலும் அவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த நபர் இவர்தான் கல்யாண சுந்தரம் நன்றாக பாட்டு எழுதுவார் என கூறியுள்ளார்.
அதை கேட்ட வீரப்பன் எங்கே எழுதிய பாட்டிலே ஒன்னு பாடு என கூறியுள்ளார். உடனே கல்யாணசுந்தரம் அங்கிருந்த மேசையை தட்டிக்கொண்ட காடு வெளஞ்சதும் மச்சான் என்கிற பாடலை பாடினார். அதை கேட்ட வீரப்பன் எம்.ஜி.ஆரிடம் சென்று இந்த விஷயத்தை கூறியுள்ளார்.
உடனே அந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் அதற்காக நாடோடி மன்னன் படத்தில் ஒரு காட்சியை அமைத்து அந்த பாடலை வைத்தார். அந்த பாடல்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் பிரபலப்படுத்தியது.