எனக்கு காப்பிரைட்ஸ் தேவையில்லை.. பெரிய மனசோடு தேவா சொன்ன விஷயம்.!
தமிழில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் தேவா. மெலோடி கானா என இரண்டிலுமே சிறப்பு வாய்ந்தவராக இருந்தாலும் கூட தேவாவின் திறமைக்கான அங்கீகாரம் என்பது பெரிதாக தமிழ் சினிமாவில் கிடைத்தது இல்லை.
ஆரம்பக்கட்டம் முதலே தேவா கானா பாடல்கள் மட்டுமே இசையமைக்க கூடியவர் என்றே பலரும் கருதி வந்தனர். இதனால் அவர் மெலோடியாக போட்ட பாடலுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட அப்போது பிரபலமாக இசையமைப்பாளர் இளையராஜாதான் அந்த படங்களுக்கு இசையமைத்தார் என பலரும் நினைத்து வந்தனர்.
அதனை குறிப்பிடும் விதத்தில்தான் லப்பர் பந்து திரைப்படத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. அது பற்றி இசையமைப்பாளர் தேவா கூறும்போது அந்த காட்சியை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார் தேவா.
அதில் அவர் கூறும்போது நான் இசையமைக்கும்போது அந்த இசை நடிகர், இயக்குனரை விட மக்களுக்குதான் மிகவும் பிடிக்க வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில்தான் எனது இசை இருக்கும்.
இப்போதும் மக்கள் பலரும் எனது பாடல் இசையை பயன்படுத்துகின்றனர். எனக்கு காபிரைட்ஸ் எல்லாம் தேவையில்லை. என்ன அதில் பணம்தான கிடைக்கும். இன்னைக்கும் சின்ன குழந்தைகள் கூட என் பாடலை ரசிக்கிறாங்க அது போதும் எனக்கு என கூறியிருந்தார் தேவா.