News
தளபதி எப்போ தலைவர் ஆவார்? குடைந்த நெல்சன்! – எஸ்கேப் ஆன விஜய்!
பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு நடந்த தொலைக்காட்சி பேட்டியில் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. வழக்கமாக விஜய் படம் ரிலீஸாகும் முன்னே அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்டவை நடக்கும். ஆனால் இந்த படத்திற்கு அப்படியான நிகழ்ச்சி ஏதும் நடைபெறாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் விஜய்யை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஒவ்வொரு விஜய் படமும் வெளியாகும்போது விஜய்யின் பட வசனங்களை அரசியலோடு தொடர்புப்படுத்தி பேசுவது, விஜய்யை அரசியலோடு தொடர்புப்படுத்தி பேனர் வைப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுகின்றனர். சமீப காலமாக ரசிகர்கள் இவ்வாறு செய்வதை விஜய் மக்கள் இயக்கம் கடுமையாக கட்டுப்படுத்தி எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் நேர்க்காணலில் விஜய்யிடம் கேள்வி கேட்ட நெல்சன் “இளைய தளபதி தற்போது மக்கள் விரும்பும் தளபதியாக மாறி இருக்கிறார். இந்த தளபதி எப்போது தலைவராக மாறுவார்?”என்று கேள்வி எழுப்பினார்,
இதற்கு பதிலளித்த விஜய் “மக்கள்தான் இளைய தளபதியை தளபதியாக மாற்றினார்கள். மக்கள் தலைவராக மாற்ற விரும்பினால் அதுவும் நடக்கலாம். அது மக்களின் விருப்பத்தை பொறுத்தது” என சூசகமாக பதிலளித்துள்ளார்.
