கன்னட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக காந்தாரா திரைப்படம் இருந்து வருகிறது. காந்தாரா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்.
இந்த திரைப்படம் இரண்டாம் பாகம் என்றாலும் கூட முதல் பாகத்திற்கு முந்தைய கதை அம்சத்தை கொண்டு இந்த திரைப்படம் இருக்கிறது. முதல் பாகமானது பஞ்சுருளி என்கிற தெய்வத்தை அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.

வெளியான சில நாட்களிலேயே 700 கோடியை தாண்டி வெற்றியை கொடுத்திருக்கிறது காந்தாரா சாப்டர் 1 திரைப்படம். அதே போல இதன் முதல் பாகமும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை கொடுத்தது. இதற்கு நடுவே தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் இதுக்குறித்து வருத்தம் அடைந்தும் வருகின்றனர்.
ஏனெனில் தமிழில் வெளியாகும் திரைப்படங்களை வெற்றி படமாக்காமல் மக்கள் வேற்று மொழி படங்களை எதற்கு இவ்வளவு வெற்றி அடைய வைக்கின்றனர் என்பது அவர்களது வாதமாக இருக்கிறது. வேற்று மொழி படம், பரிச்சயமில்லாத கதாநாயகன் என்கிற போதும் கூட எப்படி இந்த படம் வெற்றியை கொடுத்தது என்பதற்கான காரணத்தை முதலில் பார்க்க வேண்டும்.
வட்டார தெய்வ வழிபாடு:
உலகம் முழுக்க மக்களுக்கு மத்தியில் நாகரீகம் வருவதற்கு முன்பு, மதங்கள் வருவதற்கு முன்பு பழங்குடிகளாக இருந்த காலம் தொட்டே அவர்கள் இயற்கையையோ ஒரு மனிதனையோ கடவுளாக வழிப்பட்டு வந்தனர். அந்த காலங்களில் இயற்கைக்கு பயந்த மக்கள் தொடர்ந்து அதற்கு ஒரு உருவத்தை உருவாக்கி வணங்கி வந்தனர்.
அதே போல தங்களுக்காக உயிர் நீத்த அல்லது அநியாயமாக கொல்லப்பட்ட உயிர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களை தெய்வங்களாக வணங்கினர். அப்படிதான் நாம் வணங்கி வரும் அய்யனார், வீரனார் மாதிரியான தெய்வங்கள் எல்லாம் இருந்து வருகின்றன.
இவற்றை சிறு தெய்வ வழிபாடு என்று பொதுவாக கூறுவார்கள். விஷ்ணு, சிவன், பிரம்மன் மாதிரியான கடவுள்களை இந்தியாவில் எல்லா இந்துக்களுமே வணங்குவார்கள். ஆனால் இங்கு வணங்கும் அய்யனாரை கர்நாடகா மக்கள் வணங்க மாட்டார்கள். அதே போல அங்கு உள்ள தெய்வமான பஞ்சுருளியை நாம் வணங்குவதில்லை.
எனவே மக்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பிருந்தே மக்களுடன் ஒன்றிய ஒரு தெய்வ வழிபாடாக இது இருக்கிறது.
வட இந்திய தெய்வ படங்கள்:
வட இந்தியாவில் வட்டார தெய்வங்களை விட முன்னிலைப்படுத்தப்பட்ட தெய்வங்களாக விஷ்ணுவின் அவதாரங்களே இருக்கின்றன. அதனாலேயே பாலிவுட்டில் வரும் படங்கள் கூட பெரும்பாலும் அந்த அவதாரங்களை அடிப்படையாக கொண்டே வெளிவருகின்றன.
அதே சமயம் அந்த தெய்வங்களை காட்டும்போது முகம் முழுக்க சவரம் செய்யப்பட்டு மிகவும் சுத்தமாக காட்டுகின்றனர். தெய்வ நிலையிலேயே காட்டப்படுவதால் இந்த தெய்வங்கள் தென்னிந்திய தெய்வ வழிப்பாட்டோடு ஒப்பிடும்போது மக்களுக்கு நெருக்கமில்லாத தன்மையை உருவாக்கி இருக்கிறது.
தமிழ் சினிமாவிலும் கூட அம்மன் படங்களில் அம்மனை மிகவும் நாகரிகமான பெண்ணாக காட்டுவார்கள். ஆனால் காளி மாதிரியான அவதாரங்கள் எவ்வளவு ருத்ரமானவை என்பதை நம் ஊர் கோவில்களில் பார்த்தாலே தெரியும்.
சில பாடல்களில் கூட சுடுகாட்டில் குடியிருப்பவள், மண்டை ஓட்டை மாலை ஓடாக போட்டவள் என அம்மனை பாடல் வரிகளில் கூறினாலும் படத்தில் வரும்போது அப்படி ஒரு தெய்வமாக அம்மன் தோன்றுவதில்லை.
காந்தாரா படத்தின் வெற்றி:
அந்த இடத்தில்தான் காந்தாரா திரைப்படம் மாற்றி அமைந்த திரைப்படமாக இருந்தது. ஒரு வேளை அம்மனை அப்படி ஒரு ருத்ர அவதாரமாகவே திரைப்படத்தில் காட்டி இருந்தால் எப்படி இருக்கும். பழங்குடிகள் வணங்கிய ருத்ர ரூபமான அம்மனை திரைப்படத்தில் கண் முன் கொண்டு வந்தால் அது மக்களுக்கு தெய்வ தரிசனமாகவே தெரியும்.
எனவே அப்படியான ஒரு விஷயத்தை ரிஷப் ஷெட்டி தனது திரைப்படத்தில் கொண்டு வந்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கூறலாம். ஊர்களில் திருவிழாக்களில் சாமியாடும் நபர்களை போலதான் சாமி வந்த பிறகு ரிஷப் ஷெட்டியின் பாவனைகள் படத்தில் இருக்கும்.
பெரும்பாலும் யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை என்றாலும் கூட சாமியாடிகள் மூலமாகதான் அவர்கள் தெய்வங்களை பார்த்துள்ளனர். காந்தாரா திரைப்படத்தில் சாமியாடியதன் மூலம் ரிஷப் ஷெட்டியும் அதையே செய்துள்ளார். இந்த காரணங்களால்தான் வேற்று மொழி படமாக இருந்தாலும் காந்தாரா பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.










