சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் லால் சலாம் திரைப்படத்தில் இவருக்கு குறைந்த அளவிலான ஒரு கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன. டான் திரைப்படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்தியுடன் ரஜினி அடுத்த படம் பண்ண போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சிபி சக்கரவர்த்தியின் கதை பிடிக்கவில்லை என ரஜினி கூறிவிட்டார். இதையடுத்து ஜெய் பீம் திரைப்பட இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தை ரஜினி நடிக்க இருக்கிறார் என்கிற பேச்சுக்கள் இருந்து வந்தன.
இதற்காக இயக்குனர் ஞானவேலின் படக்குழு திரைக்கதை வேலைகளையும் பார்த்து வந்தனர். இந்நிலையில் இன்று லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், ஞானவேல் கூட்டணி திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளது.
லைக்கா டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது “லைக்கா குடும்ப தலைவர் திரு சுபாஷ் கரன் அவர்கள் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றும் ஒரு பெருமைமிகு தருணம் இது தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் தலைவர் 170 திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இசை வழி நம் இதயங்களை இணைக்கும் திரு அனிருத் இசையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை படைத்தளிக்கும் திரு சுபாஷ் கரன் தயாரிப்பில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் திரு ஜி கே எம் தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் தலைவர் 170 திரைப்படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம். நன்றி.” என கூறப்பட்டுள்ளது.








