News
சினிமால நடிக்கணும்னு எனக்கு ஆசையே கிடையாது! – நடிகர் நாசர் சினிமாவிற்கு வந்த கதை!
பொதுவாக சினிமாவிற்கு வந்து பெரிதாக இருக்கும் கலைஞர்கள் பலரும் ஆரம்பம் முதலே சினிமாவிற்காக போராடி சினிமாவில் கால்தடம் பதித்தவர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் அனைவருக்கும் இந்த கதை பொருந்தாது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் நாசரே அந்த மாதிரியான ஒரு பின்கதையை கொண்டவர்தான். நாசருக்கு சின்ன வயது முதலே திரைத்துறையில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவரது குடும்பமும் வறுமையில் வாடும் ஒரு குடும்பமாகதான் இருந்தது. இதனால் படிப்பை முடித்த பிறகு ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே நாசரின் கனவாக இருந்தது.
ஆனால் நாசரின் தந்தையோ வேறு கனவுகளை கொண்டிருந்தார், நாசர் திரைத்துறைக்கு செல்ல வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். இந்த நிலையில் நாசருக்கு இந்திய விமானத்துறையில் பணி கிடைத்தது.
மாதா மாதம் சம்பளம் நிரந்தர வேலை என்பதால் மகிழ்ச்சியாக அந்த வேலையில் சேர்ந்தார் நாசர். ஆனால் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை என்பதால் சீக்கிரத்திலேயே அந்த வேலையை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு அவரது தந்தை நாசரை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்த்துவிட்டார். அங்கு நாசருக்கு சில நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அப்போதும் கூட நடிப்பின் மீது அவருக்கு பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் இயக்குனர் பாலச்சந்தரிடம் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக பாலச்சந்தர் 1985 இல் கல்யாண அகதிகள் என்கிற திரைப்படத்தில் நாசருக்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகு வகை வகையான நடிப்பை காட்டிய நாசர் இதுவரைக்கும் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
