Special Articles
இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்
உலக அளவில் பேய் படங்களுக்கு என்று தனி மவுசு உண்டு. உலக அளவில் வெளியான சில பேய் படங்கள் எப்போதும் அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்துவதாக இருந்துள்ளன. அப்படி பலரையும் பயமுறுத்திய 10 பேய்ப்படங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
01.எக்ஸார்சிஸ்ட் (1973)

1973 இல் பலரையும் அச்சத்திற்கு உள்ளாக்கிய ஒரு முக்கியமான திரைப்படம் எக்ஸார்சிஸ்ட். ஒரு குழந்தைக்கு பேய் பிடித்திருக்க அந்த பேயை விரட்டுவதற்கு பாதிரியார் முயற்சிக்கும் முயற்சிகளே படத்தின் கதையாய் உள்ளது. இந்த சமயத்தில் பேய் பிடித்த அந்த பெண்ணின் நடவடிக்கைகள் அச்சமூட்டுவதாய் இருக்கின்றன. ஆஸ்கார் விருதுகளில் சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் பேய் திரைப்படம் எக்ஸார்சிஸ்ட் என கூறப்படுகிறது. இப்போது பார்ப்பவர்களை இந்த திரைப்படம் பயமுறுத்துமா? என்பது கேள்விகுறித்தான் என்றாலும் வெளியான சமகாலத்தில் இது ஒரு பயங்கரமான திரில்லர் படமாக இருந்துள்ளது.
02. கான்ஜூரிங் (2013)

ஹாலிவுட் திரைப்படங்களில் ஹாரர் திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஜேம்ஸ் வானின் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் கான்ஜுரிங். எட் மற்றும் லொரய்ன் வாரன் என்று உண்மையாகவே இருந்த பேய் ஓட்டுபவர்களின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் கான்ஜூரிங். வழக்கம் போல புது வீட்டிற்கு குடி போகும்போது அதனுள் இருக்கும் பேயால் பாதிக்கப்படும் குடும்பம் என கதை இருந்தாலும் கூட இது மக்களிடையே பெற்ற வரவேற்பின் காரணமாக கான்ஜூரிங்கில் அடுத்து 2 பாகங்கள் வெளிவந்தது.
03.த மீடியம் (2021)

தாய்லாந்து சினிமாவில் போன வருடம் வெளியான ஒரு ஹாரர் திரைப்படம்தான் த மீடியம். படம் முழுக்க டாக்குமெண்டரி திரைப்படம் போல எடுத்திருப்பதால் பலரும் இந்த கதை உணமை என நம்பி விட்டனர். தாய்லாந்தில் கிராமத்தில் வசிக்கும் மிங் எனும் பெண்ணிற்கு பேய் பிடிக்கிறது. இதன் காரணமாக அவள் வித்தியாசமாக நடந்துக்கொள்ள துவங்குகிறாள். அந்த ஊரிலேயே ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளும் மீடியமாக நிம் எனும் பெண் உள்ளார். இவர் மிங்கிற்கு பேய் பிடித்துள்ளதை அறிந்து அதை விரட்ட நினைக்கிறார். ஆனால் அவர் நினைத்ததை விட அந்த பேய் சக்தி வாய்ந்ததாக உள்ளது. பிறகு அவர் அந்த பேயை விரட்டினாரா என்பதே கதை. மிங்கின் நடவடிக்கைகள் நமக்கு பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
04.ஷைனிங் (1980)

ஆங்கிலத்தில் மர்ம நாவல்களுக்கு பெயர் போன எழுத்தாளரான ஸ்டீபன் கிங் கதையை, ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான ஸ்டான்லி குப்ரிக் திரைப்படமாக எடுக்கும்போது அது எப்படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படம்தான் ஷைனிங். ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் போகும் கதாநாயனுக்கு நடக்கும் ஹாரரான நிகழ்வுகளே ஷைனிங் திரைப்படத்தின் கதை. பேய் படங்களில் இது ஏன் சிறந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது எனில் ஹாலிவுட்டின் சிறந்த நடிகரான ஜாக் நிக்கல்சன், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த எழுத்தாளர் மூவரும் ஒன்றிணைந்த ஒரு சிறப்பான பேய் படமாக ஷைனிங் உள்ளது. அதனால் இப்போது பார்த்தாலும் நமக்கு பயத்தை ஏற்படுத்தும் படமாக இது உள்ளது.
05.தி ரிங் (2002)

ஜப்பானில் சில பேய்கள் அதிக பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அப்படி ஜப்பானில் புகழ்பெற்று பிறகு ஹாலிவுட்டிலும் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் த ரிங். இந்த திரைப்பட கதையின்படி ஒரு வீடியோ கேசட் இருக்கும். அதை யாராவது பார்த்துவிட்டால் அவர்களுக்கு பிறகு ஒரு போன் வரும். அதில் பேய் பேசும், அது ஏழு நாளைக்குள் அவர்களை கொல்ல போவதாக கூறும். அடுத்த ஏழு நாட்களில் வீட்டு டிவியில் தானாக ஒரு வீடியோ வரும். அதில் ஒரு கிணறு இருக்கும். அதற்குள் இருந்து வெளிவரும் பேய். டிவியை விட்டு வெளிவந்து அந்த நபரை கொல்லும். இந்த திரைப்படத்தின் வெற்றி காரணமாக இதன் இரண்டாம் பாகமும் வெளியானது.
06.ஷட்டர் (2004)

சிவி என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. அதை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த படத்தின் ஒர்ஜினல் வெர்சன்தான் ஷட்டர். பட கதையின்படி கதாநாயகன் ஒரு போட்டோ கிராபராக இருப்பார். அவர் எடுக்கும் சில புகைப்படங்களில் அமானுஷ்யமான விஷயங்கள் இருப்பதை பார்ப்பார். அதை பற்றி ஆய்வு செய்யும்போது புகைப்படங்களில் பேய்கள் இருப்பது தெரிகிறது என்பதை கண்டறிவார். பிறகு தன்னை சுற்றி நடக்கும் அமானுஷ்ய விஷயங்களையும் அதற்கான காரணத்தை அவர் கண்டறிவதும் திரைப்படத்தின் கதையாக உள்ளது.
07.இன்சிடியஸ் (2010)

ஜேம்ஸ் வானின் மற்றுமொரு சிறப்பான பேய் படம் என இன்சிடியஸை கூறலாம். கோமாவில் இருக்கும் ஒரு சிறுவனை சுற்றி நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. பேய் ஓட்டும் ஒரு பெண் பார்க்கும்போது, எப்போதும் அந்த சிறுவனின் உடலை சுற்றி பேய்கள் நடமாடுவதை பார்க்கிறாள். அதன் மூலம் அந்த சிறுவனின் ஆன்மாவானது பேய்களிடம் மாட்டி கொண்டுள்ளதை அவள் அறிகிறாள். பிறகு அந்த சிறுவனின் ஆன்மாவை பேய்களிடம் இருந்து மீட்பதே படத்தின் கதையாக உள்ளது.
08.இட் (2017)

ஸ்டீபன் கிங் நாவலை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இட். ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த இந்த திரைப்படம் அதிகமான வசூலை பெற்ற முக்கியமான பேய் படமாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 27 வருடங்களுக்கு ஒரு முறை சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகமாக காணாமல் போகின்றனர். இது ஏன் என பார்க்கும்போது அந்த ஊரில் பாதாளத்தில் வாழும் ஒரு பேய் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதாளத்தை விட்டு வெளியே வந்து சிறுவர்களை சாப்பிடுகிறது. இதை கண்டறியும் ஒரு நண்பர்கள் குழு அந்த பேயை அழிக்க முயற்சிப்பதே கதையின் கருவாக உள்ளது. சிறுவர்/ சிறுமியர் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பதால் இது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படமாக உள்ளது.
09.டெத் சைலன்ஸ் (2007)

பொம்மைகள் உடலில் பேய் இருக்கும் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு திரைப்படம்தான் டெத் சைலன்ஸ். கதாநாயகன் இருக்கும் வீட்டிற்கு பரிசாக ஒரு பொம்மை வருகிறது. அது அவனின் மனைவியை வாயை கிழித்து கொல்கிறது. முதலில் எதனால் தனது மனைவி இறந்தாள் என்பதை அறியாத ஹீரோ, பிறகு இதற்கு அந்த பொம்மையே காரணம் என்பதை அறிகிறான். பிறகு அவன் அந்த பொம்மையை எப்படி அழிக்கிறான். அல்லது பொம்மையில் இருக்கும் பேய் இவனை அழித்ததா என்பதே கதை.
10.தி ஓமன் (1976)

1976 இல் துவங்கி பல முறை ஹாலிவுட்டில் திரும்ப திரும்ப எடுக்கப்பட்ட கதை ஓமன். இந்த படத்தின் கதைப்படி கடவுளின் பிள்ளையாக இயேசு பூமியில் பிறந்தது போலவே சாத்தானின் பிள்ளை ஒன்றும் பூமியில் பிறக்கும். அது இந்த உலகை அழிப்பதற்காகவே பிறக்கும். அந்த சாத்தான் குழந்தையின் அமானுஷ்ய நிகழ்வுகளே திரைப்படம். இது தமிழில் கூட ஜென்ம நட்சத்திரம் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
