ஐயா உங்க மேல கடுமையான கோபத்தில் இருக்கேன்… மேடையில் இளையராஜாவை லாக் செய்த பார்த்திபன்!.
Ilayaraja and Parthiban: தென்னிந்திய இசையமைப்பாளர்களிலேயே மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளருக்காக மக்கள் திரைப்படத்தை பார்க்க வந்தனர் என்றால் அது இளையராஜா இசையமைத்த காலத்தில்தான்.
ராஜ்கிரண் மாதிரியான சில நடிகர்கள் தங்கள் படம் ஓடுவதற்கு இளையராஜாதான் முக்கிய காரணம் என நினைத்தனர். எனவே தங்கள் பட போஸ்டர்களிலேயே ஹீரோ படத்தை விடவும் இளையராஜா போட்டோவை பெரிதாக போட்டனர்.
ஊமை விழிகள் படத்தில் கூட ராத்திரி நேரத்து பூஜையில் மற்றும் மாமரத்து பூவெடுத்து பாடல்கள் ஹிட் கொடுத்தப்போது போஸ்டரிலேயே அந்த பாடலை போட்டுதான் விளம்பரம் செய்தனர். அப்படிப்பட்ட இளையராஜாவே மேடையில் பார்த்திபனிடம் சிக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

பொதுவாகவே பார்த்திபன் யாராவது ஒரு பிரபலத்தை மேடையில் பிடித்துவிட்டால் அவர்களிடம் கேள்வி கேட்டே வம்பு செய்வார். இப்படி ஒருமுறை மேடையில் இளையராஜாவிடம் பேசினார். அப்படி பேசும்போது அய்யா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன் அய்யா என கூறியுள்ளார்.
என்னவென கேட்டப்போது இளையராஜா எழுதிய ஒரு புத்தகத்தை எடுத்து அதில் உள்ள வரிகளை இளையராஜாவையே படிக்க சொன்னார். அதில் இளையராஜா, கடவுள் எனக்கு மக்களிடம் வழங்குவதற்காக நிறைய இசையை கொடுத்தார் ஆனால் எனக்காக எதையும் கொடுக்கவில்லை என எழுதியிருந்தார்.
அதை படித்த பிறகு பார்த்திபன் பேசும்போது, இந்த அரங்கில் உங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர், வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு இருக்கும்போது எனக்கு எதுவும் இல்லை என்று எப்படி நீங்கள் எழுதலாம் என கேட்டார் பார்த்திபன்.
அதற்கு பதிலளித்த இளையராஜா அது வேறு ஒரு அர்த்தத்தில் எழுதியது. அதை இங்கு கொண்டு வந்து பிரச்சனை செய்கிறாயே என நகைச்சுவையாக கேட்டிருந்தார்.