Actor Vijay and Vadivelu: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பும் ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றன. உதாரணத்திற்கு நடிகர் சூரியை பொறுத்தவரை வெண்ணிலா கபடி குழு, விடுதலை ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றி அமைத்த திரைப்படங்களாகும்.
இதே மாதிரி வடிவேலுவிற்கும் ஒரு சிறப்பான கதையில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இயக்குனர் எழில் அப்போது திரைத்துறையில் ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி கொண்டிருந்தார்.
சார்லி சாப்ளின் நடிப்பில் வெளிவந்த சிட்டிலைட் என்கிற திரைப்படத்தின் கதையை கொண்டு எழில் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தார். ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் அப்போது சிட்டிலைட் திரைப்படத்தை பார்த்திருந்தனர். எனவே இந்த கதை சிட்டிலைட் படத்தின் கதைதான் என்பது வெட்ட வெளிச்சமாக அவர்களுக்கு தெரிந்தது.

ஆனால் தமிழில் அந்த மாதிரியான கதை எதுவும் படமாக வரவில்லை என்பதால் கண்டிப்பாக அந்த கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது எழிலின் மனநிலையாக இருந்தது. இந்த நிலையில் பல கதாநாயகர்களிடம் இந்த கதையை கூறினார்.
முதலில் இந்த கதையை நடிகர் பாண்டியராஜனிடம் கூறினார் எழில். ஏனெனில் முதலில் இந்த கதையை காமெடி படமாக எடுக்கவே அவர் முடிவு செய்திருந்தார். பாண்டியராஜனுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. இதில் கதாநாயகியாக குஷ்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பாண்டியராஜன் அந்த கதையை குஷ்புவிடம் கூறுமாறு கூறியிருக்கிறார்.
குஷ்புவிற்கும் இந்த கதை பிடித்துப்போக பல தயாரிப்பாளர்களை தேடி போய் எந்த தயாரிப்பாளரும் கிடைக்காமல் சோர்ந்து போய்விட்டார் எழில். அதன் பிறகு வடிவேலுவிடம் இதே கதையில் நடிப்பதற்கு கேட்டப்பொழுது வடிவேலுவிற்கும் இந்த கதை பிடித்திருந்தது.
ஆனால் வடிவேலுவை கதாநாயகனாக போடுவதற்கு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இதனால் எழில் விரக்தியில் இருக்கும்போது அவரது நண்பர்கள் எதற்காக இதை ஒரு காமெடி படமாக எடுக்க நினைக்கிறாய். பெரிய கதாநாயகர்களுக்கு ஏற்றாற் போல ஒரு கமர்ஷியல் கதையாக இதை எழுது என அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதன்படி மீண்டும் திரைக்கதையை மாற்றியமைத்தார் எழில். இந்த முறை கதை சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி சௌத்ரிக்கே பிடித்துவிட்டது. அதனை தொடர்ந்து கதையை விஜய்க்கு கூற விஜய்க்கும் படம் பிடித்துவிட துள்ளாத மனமும் துள்ளும் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.
விஜய்க்கு அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரிக்கும்தான், அதனை தொடர்ந்து அப்போது படத்தை நிராகரித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அது ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருந்தது. ஒருவேளை இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்தால் அப்போதே கதாநாயகன் ஆகியிருப்பார் வடிவேலு.