புரட்சி தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அன்பாக அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவருக்கு எப்போதுமே ஒரு பெரிய ரசிக பட்டாளம் இருந்தது என்றே கூற வேண்டும். இதனாலேயே எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே அமைந்தன.
எம்.ஜி.ஆர் முடிந்தவரை பலருக்கும் நன்மைகள் செய்பவர் என்றாலும் அத்திமீறி நடந்துக்கொள்பவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவே இருப்பார். இதனாலேயே திரைத்துறையில் கூட அனைத்து நடிகர்களுடனும் நெருங்கி பழக மாட்டார் எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சில நடிகர்களிடம் மட்டுமே நெருக்கமான நட்பை கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஆடை அலங்காரம் செய்யும் முத்து என்பவர் எம்.ஜி.ஆரின் பெரும் விசுவாசி. எம்.ஜி.ஆரும் அவரை மிகவும் நம்பினார். இந்த நிலையில் ஒரு நாள் எம்.ஜி.ஆரை பெரிய ஆட்கள் பலரும் சந்திக்க வந்த நிலையில் ஒரு நபர் மறைந்திருந்து அவரை போட்டோ பிடித்துவிட்டார்.

இதனை அறிந்த எம்.ஜி.ஆர் அந்த போட்டோ இந்த வளாகத்தை விட்டு வெளியேற கூடாது என கூறிவிட்டார். உடனே முத்து அங்கிருந்த அனைவரையும் சோதித்து பார்த்தப்போது பிலிம் ரோலோடு ஒரு நபர் சிக்கினார்.
அவரை எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்றார். எம்.ஜி.ஆர் அந்த நபரிடம் பிலிமை வாங்கி கிழித்து போட்டார். பிறகு அதன் விலை எவ்வளவு என கேட்டார் 100 ரூபாய் என்றார் அந்த நபர். உடனே அவரிடம் 500 ரூபாயை கொடுத்து என்னை போட்டோ பிடிப்பது தவறல்ல. ஆனால் என் அனுமதி இல்லாமல் பிடிப்பது தவறு என கூறி அனுப்பியுள்ளார்.
இதனை முத்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.






