Tamil Cinema News
’மது அருந்திவிட்டு.. ஆண் நண்பர்களுடன்’, ‘அதை பத்தி சொன்னா தப்பா நினைப்பாங்க’ – மனிஷா கொய்ராலா ஓபன் டாக்!
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் மனிஷா கொய்ராலா. 90களில் இந்தி சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஊர்மிளா மடோன்கர், ஷில்பா ஷெட்டி, தபு வரிசையில் மனிஷா கொய்ராலாவும் முக்கியமானவர்.
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘பாம்பே’ திரைப்படம் பெரும் ஹிட் அடித்ததுடன், தமிழில் இவருக்கு பெரும் வாய்ப்புகளை வழங்கியது. தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
மனிஷா கொய்ராலாவுக்கு ஆரம்பம் முதலே மது, புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. 2012ம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் இவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வர நீண்ட காலம் ஆனது. அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தவர் தமிழில் தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் வில்லியாக மீண்டும் தோன்றினார்.

நீண்ட காலம் கழித்து தற்போது மீண்டும் ‘ஹீராமண்டி’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மனிஷா கொய்ராலா. தற்போது மீண்டும் பல படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்துக் கொண்டுள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் தனது மது பழக்கம் குறித்தும், ஆண் நண்பர்கள் உடனான பழக்கம் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் “ஒருமுறை நான் ஆண் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றபோது கோக்கில் மதுவை கலந்து அளித்துவிட்டனர். நான் வீட்டிற்கு சென்றபோது என் அம்மா அதை கண்டுபிடித்து என்னை திட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது.
பொதுவாக ஆண் நடிகர்கள் தாங்கள் பல பெண்களுடன் ஊர் சுற்றுவதை பெருமையாக வெளியே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் ஒரு பெண் நடிகை அப்படி அதை வெளியில் சொன்னால் அவரை இந்த சமூகம் தவறாகதான் பார்க்கும்.
எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்தார்கள். நான் ஆண் நண்பர்களுடன் நிறைய சுற்றியிருக்கிறேன். நேரங்கள் செலவழித்திருக்கிறேன். இதை சொன்னால் என்னை தவறாக பேசுவார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை” என கூறியுள்ளார்.
