கமலுக்கு வர்மகலை கத்து குடுத்ததே நான்தான்.. ஆனா..? – இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து தயாராகியுள்ள படம் ‘இந்தியன் 2’. 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியான இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக வெளியாகிறது. இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி மதுரை முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “மஞ்சா வர்மக்கலை தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் ஆராய்ச்சிக் கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை பயிற்சி அளித்து வருகிறோம்.

கடந்த 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தில் கமல்ஹாசன் செய்யும் வர்மக்கலைகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நான்தான் வர்மக்கலையை பயிற்சி அளித்தேன்.
இந்த வர்மக்கலைகள் அனைத்தும் ரகசியமானவை. அதனால் அந்த படத்தின் டைட்டில் கார்டிலும் எனது பெயர் சேர்க்கப்பட்டது.
ஆனால் அன்று நான் சொல்லித்தந்த பல கலைகளை, கை முத்திரைகளை கமல்ஹாசன் இந்த படத்திலும் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு என்னிடம் அவர்கள் அனுமதி பெறவில்லை. எனது பெயரை டைட்டில் கார்டில் போட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பதில் இல்லை.
எனவே எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்வேறு தடைகளை தாண்டி உருவாகி ரிலீஸுக்கு தயாராக உள்ள இந்தியன் 2 படத்திற்கு எழுந்துள்ள இந்த புதிய சிக்கல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.