News
ரஜினி விஜய்க்கு வருவது வெறும் ரசிகர் கூட்டம்தான்…ஆனா இந்த படத்துக்கு அப்படியில்லை!.. பரபரப்பை கிளப்பிய இயக்குனர் பேரரசு!.
காதலில் சாதி பார்த்தால் அது புனிதம் இல்லை, காதலில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் ரஜினி விஜய் படத்திற்கு வரும் கூட்டத்தை விட உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில், சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ளது காடுவெட்டி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதில் ஆர்.கே.சுரேஷ் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்தக் கொண்ட இயக்குநர் பேரரசு பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தளபதி விஜய், ரஜினிக்கு வருவதெல்லாம் வெறும் ரசிகர் கூட்டமாக இருக்கும் எனவும் ஆனால், காடுவெட்டிக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
நடிகர் பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய ஹீரோவாக மாறியது போல, நடிகர் நெப்போலியன் ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் சீவலப்பேரி பாண்டி படத்திற்கு பிறகு மிகப்பெரிய ஹீரோவானது போல, காடுவெட்டியில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் மிகப்பெரிய ஹீரோவாக வருவார் என தெரிவித்துள்ளார்.
ஆர். கே சுரேஷ் மாதிரியான ஆட்கள் வரும்போது தான் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும் எனவும் வியாபாரத்துக்காக படம் எடுத்தால் வெட்டு, துப்பாக்கி என்று தான் செல்லும் எனவும் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தான் அந்த படத்தை பார்க்கவில்லை எனவும் ட்ரெய்லரையும், பாடல்களையும் பார்த்ததை வைத்து யூகித்து சொல்வதாகவும் கூறியுள்ளார். மேலும், நிறைய காதல் படங்கள் தமிழ் திரையுலகில் வந்திருந்தாலும் காடுவெட்டி ட்ரெய்லரை பார்த்தவுடன் இது வேற மாதிரி காதல் கதை என புரிந்து விட்டதாக கூறிய அவர், இதனை காதல் விழிப்புணர்வு படம் எனவும் அந்த காதலில் சாதி, மதம், பொருளாதாரம் பார்த்தால் அது புனிதமாக இருக்காது எனவும் காதலில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் உணர்ச்சிக்கரமாக பேசியுள்ளார்.
