கிருஷ்ணனின் புதையலை தேடி செல்லும் சுவாரஸ்ய கதை –  கார்த்திகேயா 2 திரைப்பட விமர்சனம்

நமது தமிழ் சினிமாவில் அதிக அளவில் சாகச திரைப்படங்கள் வந்தது இல்லை. மிக குறைவான அளவிலேயே சாகச படங்கள் வந்துள்ளன. 

தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வந்த சாகச திரைப்படம்தான் கார்த்திகேயா 2. இந்த படத்தில் நிக்கில் சித்தார்த்தா, அனுபாமா பரமேஸ்வரன் இன்னும் பலர் நடித்திருந்தனர். படம் துவங்கி சிறிது நேரம் சாதரணமாக சென்றாலும் ஒரு 20 நிமிடத்திலேயே நம்மை சாகச பயணத்திற்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

இதன் முதல் பாகத்தில் முருகனை முக்கிய கடவுளாக வைத்து படம் இருந்தது. இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணனை முக்கிய கடவுளாக ஆக்கி உள்ளனர். படத்தின் கதைப்படி கார்த்திகேயா ஒரு டாக்டர். மருத்துவ விஷயங்கள் தவிர்த்து தொல்லியல் சார்ந்த விஷயங்களிலும் கூட இவருக்கு ஈடுபாடு அதிகம். 

இந்நிலையில் ஒரு பெரும் நிறுவனம் ஒரு கொடும் நோயை உலகில் பரப்புவதற்கு திட்டம் தீட்டுகிறது. அதற்கான மருந்தையும் அவர்களே கண்டுப்பிடித்து அதன் மூலம் உலகை தங்கள் கைக்குள் கொண்டு வர திட்டம் தீட்டுகின்றனர்.

ஆனால் உலகில் உள்ள பல நோய்களுக்கான மருந்தை 5000 வருடங்களுக்கு முன்பே கடவுள் கிருஷ்ணன் ஒரு கால் சிலம்பில் எழுதி அதை ஒளித்து வைக்கிறார். அந்த சிலம்பை கண்டுப்பிடிக்கும் பணி கதாநாயகனை வந்தடைகிறது.

பல்வேறு இடையூறுகளுக்கு நடுவே எப்படி அந்த புதையலை கதாநாயகன் எடுக்க போகிறார் என்பதே கதை. 

படத்தில் அறிவியலுடன் ஆன்மீகத்தை ஒப்பிட்டு பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கும். ஆனால் படம் முழுக்க கற்பனையே, அதில் உள்ள எதுவும் உண்மை இல்லை என்பதால் அதை நாம் உண்மை வாதத்திற்கு கொண்டு வர தேவையில்லை.

படத்தின் சண்டை காட்சிகளை பொறுத்தவரை சிறப்பாகவே இருந்தன. அதிலும் இறுதி காட்சிகள் மனதை விட்டு நீங்கா வண்ணம் இருந்தன.

படத்தின் இசையை பொறுத்தவரை கிருஷ்ணரை பற்றி கூறும்போது எல்லாம் ஒரு புல்லாங்குழல் இசை இடம்பெற்றது அது மிகவும் அருமையாக இருந்தது.

படத்தில் கூறப்பட்ட தேவையற்ற பொய்களை தவிர்த்தால் படம் பார்ப்பதற்கு ஏற்ற ஒரு படமாக இருக்கிறது. இந்த படம் தமிழ் டப்பிங்கில் காண கிடைக்கிறது.

Refresh