தமிழ் சினிமாவில் நல்லதொரு நடிகராக இருந்து ஏராளமான படங்களில் நடித்தவர் விஜயகாந்த். படங்களில் நடிப்பதை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்து ஜூனியர் ஆர்டிஸ்டுகள் முதற்கொண்டு பலருக்கு பல உதவிகளை செய்ததோடு, கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனையும் அடைத்தார். அரசியலிலும் மதிப்புமிக்க தலைவராக விளங்கிய விஜயகாந்த் டிசம்பர் 2023ல் மறைந்தார்.
மொத்த தமிழ்நாட்டு மக்களுமே அவரது இழப்பிற்கு கலங்கினர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்திற்கு மரியாதை செய்யும் விதமாக அவரை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக சில படங்களில் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் விஜயகாந்த் கதாப்பாத்திரம் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுபோல வேறு சில படங்களிலும் விஜயகாந்தை ஏஐ மூலமாக கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது GOAT படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






