Hollywood Cinema news
ட்ரான்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் த பீஸ்ட் – பட்டையை கிளப்பும் மறு உருவாக்கம்!..
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் ட்ரான்ஸ்பார்மர்ஸ். செவர்லாட் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியாகி இறுதியில் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஒரு பிரபலமான படமானது.
அதில் மஞ்சள் நிறத்தில் வரும் பம்பிள் பி காரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ட்ரான்ஸ் பார்மர்ஸ் திரைப்படம் தொடர் திரைப்படமாக வருவதில் பல சிக்கல்கள் இருந்தன. பாகுபலி மாதிரி படத்தை கண்டின்யூ வைத்து கொண்டு போகாமல் தமிழில் வரும் முனி, அரண்மனை போல ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு கதை என சென்று கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறையும் ஆட்டோ பாட்களின் தலைவனான ஆப்டிமெஸ் ப்ரைம், டெசப்டிகான் என்னும் வில்லன்களின் தலைவனான மெகாட்ரானை கொல்லும். ஆனால் அடுத்த படத்தில் பார்த்தால் மீண்டும் வந்து முன்னால் நிற்கும் டெசப்டிகான். இதனால் சம்பவம் செய்ததற்கு ஒரு அர்த்தம் இல்லையா! என்கிற விரக்தி நம்மிடையேயும் இருக்கும்.
ஆனால் இந்த முறை மெய்யாலுமே முதலில் இருந்து புதுக்கதையாக எடுக்கிறோம் என களம் இறங்கியுள்ளனர். படத்தை ஸ்டீவன் கேப்பிள் ஜூனியர் இயக்கியுள்ளார். படக்கதைப்படி ட்ரான்ஸ்பார்மர்ஸ் போலவே ஆப்டிமல் என்கிற ஒரு வகையறாவும் உள்ளது. இந்த ஆப்டிமலில் ட்ரான்ஸ் பார்மர்ஸ் எல்லாம் ஆந்தை, குரங்கு,சிறுத்தை, காண்டாமிருகம் என விலங்குகளாக இருக்கும். ஆனாலும் அவையும் சரளமாக தமிழில் பேசக்கூடியவையே.
ட்ரான்ஸ்பார்மர்ஸ் தங்களது கிரகமாக சைப்ட்ரானுக்கு போக உதவும் ஒரு சாவியை யுனிக்ரான் என்னும் வில்லனிடம் இருந்து பாதுகாத்து பூமியில் ஒளித்து வைக்கின்றன ஆப்டிமல். ஏனெனில் அந்த சாவியை கொண்டு உலகங்களை உண்டு அதில்தான் உயிர்வாழும் யுனிக்ரான். இதனை அறிந்த வில்லன் டெரர்கான் என்னும் அடியாள் கூட்டத்தை அந்த சாவியை தேடி எடுத்து வர அனுப்புகிறான்.
இந்த நிலையில் சாவி நோவா டயாஸ் மற்றும் எலானா என்கிற இருவர் கையில் கிடைக்கிறது. இந்த சாவி கிடைப்பதற்கு முன்பே மிராஜ் என்கிற ஆட்டோபாட்டுடன் நண்பராகிறார் நோவா. இதன் மூலமாக ஆட்டோ பாட்ஸ், மனிதர்கள், ஆப்டிமல் மூன்று அணியும் இணைந்து அந்த சாவியை வில்லனிடம் இருந்து காப்பாற்றுவதே கதை.
இதில் ஆப்டிமல், ஆட்டோபாட்ஸ், மனிதர்கள் மூவரிடையே உள்ள உணர்வுரீதியான கட்டமைப்பை சிறப்பாக கையாண்டிருந்தார் இயக்குனர். படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாகவே அமைந்தன. வழக்கமாக படத்தில் ஆப்டிமஸ் ப்ரைமிற்குதான் கெத்து அதிகமாக இருக்கும். அதுவும் படத்தில் ஒராயிரம் முறை நாந்தான் ஆப்டிமஸ் ப்ரைம் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்.
இந்த படத்தில் அதற்கு பதிலாக பம்பிள் பிக்கு மரண் மாஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. போஸ்ட் க்ரெடிட் பகுதியில் ட்ரான்ஸ்ப்ராமர்ஸை ஜீ.ஐ.ஜோ அணியோடு கோர்த்துவிட்டு புது வகையான காம்போவை க்ரியேட் செய்துள்ளனர்.
இந்த சம்மர் எண்டுக்கு ஒரு ட்ரீட்டாக ட்ரான்ஸ்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் பீஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்