Cinema History
யாருய்யா இது? என்ன மாதிரியே இல்ல..! – வாலி வரைந்த ஓவியத்தை கலாய்த்த காமராஜர்!
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என புகழப்படுபவர் வாலி. கவிஞர் வாலி பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறுவயதில் நல்ல ஓவியமும் வரையக்கூடியவராக இருந்தார். அப்போது ஒருசமயம் அப்போதைய முதலமைச்சர் காமராஜரும், ராஜாஜியும் திருச்சிக்கு ரயிலில் வருவதாக வாலி அறிந்துள்ளார்.
உடனடியாக அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஆசைப்பட்ட வாலி அவர்களது உருவப்படத்தை ஒரு தாளில் வரைந்து கொண்டு அவர்களை காண சென்றுள்ளார். அவர்களிடம் அந்த ஓவியத்தை காட்டி ஆட்டோகிராப் கேட்டுள்ளார். முதலில் ராஜாஜியிடம் கேட்டபோது அவர் அவரது ஒரிஜினில் கையெழுத்தை போடாமல் வேறு மாதிரியாக போட்டுக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் காமராஜரிடம் சென்று காமராஜரின் ஆட்டோகிராப்பை கேட்டுள்ளார் வாலி. காமராஜர் தான் இயல்பாக எப்படி கையெழுத்திடுவாரோ அப்படியே கையெழுத்தை போட்டுள்ளார். கையெழுத்து வாங்கிக் கொண்டு சற்று நகர்ந்து சென்று தன் நண்பனிடம் பேசிய வாலி “பார்த்தாயா காமராஜர் ஒரிஜினில் கையெழுத்தை போட்டு தந்துள்ளார். ஆனால் ராஜாஜி வேண்டுமென்றே வேறுமாதிரி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார்” என பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அதை காதில் வாங்கிய காமராஜர் வாலியை அழைத்து “ஏன் தம்பி அவர் அவருடைய கையெழுத்த போடலைன்னு சொல்றியே.. நீ மட்டும் அவரை மாதிரியா அந்த ஓவியத்த வரைஞ்சிருக்க.. முதல்ல என்னையே நீ என்ன போல வரையலியே.. உன் மனம் கோணக்கூடாதுன்னுதான் கையெழுத்து போட்டேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம். இதை வாலி தன் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்தபோது கூறியுள்ளார்.
