News
மக்கள் பேச தொடங்கிவிட்டால் – கங்கை அமரனுக்கு பதிலடி பதிவிட்ட வைரமுத்து!..
கடந்த சில தினங்களாகவே வைரமுத்து இளையராஜா இடையிலான பிரச்சனைதான் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கு வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இன்னமும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் நடித்து வரும் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த வைரமுத்து ஒரு இசைக்கு பெயர் வைப்பது பாடல் வரிகள்தான். இசையும் பாடல் வரிகளும் சேர்ந்ததுதான் ஒரு பாடலே தவிர வெறும் இசை மட்டும் பாடலாகிவிட முடியாது.

இசையை விட மொழி பெரியதா அல்லது இசை பெரியதா என கேட்டால் இரண்டும் சமமானது. சில பாடல்களில் மொழி பெரியதாகவும் சில பாடல்களில் இசை பெரியதாகவும் இருக்கலாம். இதை அறிந்து கொள்பவன் ஞானி. அறியாதவன் அஞ்ஞானி என கூறியிருந்தார் வைரமுத்து.
கங்கை அமரன் கொடுத்த பதில்:
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கங்கை அமரன் கூறும்போது வைரமுத்து நன்றிக்கெட்ட தனமாக நடந்துக்கொள்கிறார். இளையராஜா மட்டும் நிழல்கள் திரைப்படத்தில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் வைரமுத்து சினிமாவிற்கு வந்திருக்க முடியுமா? இனி இளையராஜா குறித்து அவர் பேசினால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தார்.

வைரமுத்து பதிலடி:
இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து ‘குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் மூடிக்கொள்ள நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும் மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றொரு பதிவை இட்டுள்ளார்.
