News
வாரிசு படத்தை வெளியிட முடியாது? தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு!
நடிகர் விஜய் நடித்து வம்சி இயக்கி தயாராகியுள்ள படம் ‘வாரிசு’. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் ட்ரெண்டாகியுள்ளது. இந்த படத்தை பொங்கலன்று வெளியிட திட்டமிட்டு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும்போது ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
சங்கராந்தி அன்று வாரிசு படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த சமயம் தெலுங்கில் பிரபல ஹீரோக்களின் படங்களும் வெளியாகிறது. முடிந்த அளவு திரையரங்குகளில் வாரிசு படத்தை திரையிட தில் ராஜூ முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்நிலையில்தான் தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சங்கராந்தி அன்று பெரும்பாலான தெலுங்கு படங்கள் வெளியாகிறது. தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்க விதிகளின்படி சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

தெலுங்கு படங்களுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள திரையரங்குகள் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் தில் ராஜூவை குறிப்பிட்டு அறிவிப்பாக வெளியிட்டுள்ளனர். இதனால் வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட அதிகமான தியேட்டர்கள் கிடைக்காது என்பது வாரிசு படத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாரிசு படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
