Tamil Cinema News
அரசியல் சட்டத்தை கேள்விக்குறி ஆக்காதீர்கள்.. விகடனுக்கு ஆதரவாக விஜய்யின் குரல்.!
காலையில் இருந்தே விகடன் பத்திரிக்கை குறித்த செய்திதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபரான ட்ரம்பை பார்ப்பதற்கு சென்றிருந்தார். அதே சமயம் அமெரிக்காவில் தொடர்ந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடி புகுந்த இந்தியர்களை வெளியேற்றி வருகின்றனர்.
அது குறித்து ஏற்கனவே பொது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் மோடி இருக்கும் சமயத்திலும் கூட இந்த வெளியேற்றல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார் என குறிப்பிடும் வகையில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டது விகடன்.
இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வராமலேயே விகடன் தளமானது முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட ரீதியில் பதிலளிப்போம் என விகடன் பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகரும். தா.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் விகடனுக்கு ஆதரவாக பதிவு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ”மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.” என கூறியுள்ளார் விஜய்.
