வாழ்க்கையில் இளையராஜா போட்ட முதல் பாட்டு, அம்மாவோட பாட்டுதான்!.. இப்படி வேற நடந்துச்சா?..
Ilayaraja: சினிமாவில் சென்டிமென்ட் என்பது எப்போதுமே பார்க்கப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முகவரி திரைப்படத்தில் அஜித் இசை அமைப்பாளர் ஆவதற்காக முயற்சி செய்து வருவதாக கதை இருக்கும். அப்பொழுது முதல் நாள் அவர் இசையமைக்க செல்லும் பொழுது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு விபத்து ஏற்பட்டதால் சென்டிமென்ட் கருதி அந்த படத்திலிருந்து அஜித்தை நீக்கி விடுவார்கள்.
இது படத்திற்காக காட்டப்பட்ட ஒரு நிகழ்வு கிடையாது. அப்படித்தான் சினிமாவில் நடக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு இளையராஜாவுக்கும் கூட நிகழ்ந்திருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளையராஜாவிற்கு பஞ்சு அருணாச்சலம் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
முதல் படமான அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவும் அவரது தம்பி கங்கை அமரனும் சென்ற பொழுது மிகவும் பதற்றத்துடன்தான் ஸ்டுடியோவிற்கு சென்றனர். அன்று பயத்தில் இளையராஜாவிற்கு வயிறு கலக்கிய காரணத்தினால் கழிவறைக்கும் ஸ்டுடியோவிற்குமாக அலைந்து கொண்டிருந்தார் என்று கங்கை அமரன் கூறுகிறார்.

அந்த அளவிற்கு பயத்தில் இளையராஜா இருந்தபொழுது பாடல் சரியாக துவங்க இருந்த சமயத்தில் கரண்ட் கட் ஆகிவிட்டது. இதனால் திகைத்துப் போனார் இளையராஜா. ஏனெனில் தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு சென்டிமென்ட் பார்ப்பார்கள் என்பது இளையராஜாவிற்கு தெரியும்.
அதற்கு தகுந்தார் போல அங்கு இருந்த பலரும் இவர்கள் இசையமைக்க வேண்டாம் என்று பேச துவங்கி விட்டனர். அனுபவம் வாய்ந்த இசை கலைஞர்களை அழைத்து வந்து இசையமைப்போம் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்த நிலையில் பஞ்சு அருணாச்சலம் மட்டும் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தார்.
பிறகு கரண்ட் வந்தவுடனேயே இளையராஜா இசையமைத்த பாடல் அன்னக்கிளி உன்னை தேடுதே என்கிற பாடல். அந்த பாடலைக் கேட்ட பிறகு அங்கிருந்த அனைவருமே இளையராஜாவின் திறமை என்னவென்று புரிந்து கொண்டனர்.

பிறகு வீட்டிற்கு வந்த இளையராஜாவிடம் அவரது அம்மா ஆவலுடன் போன காரியம் எப்படி என்று கேட்ட பொழுது உனது பாடலை தான் பாடியிருக்கிறேன் அம்மா, எப்படி தோல்வி அடைவேன் என்று கேட்டிருக்கிறார் இளையராஜா ஆமாம் இளையராஜா பாடிய அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்கிற பாடல் இளையராஜாவின் பாடல் கிடையாது சிறுவயதில் அவரது தாய் அவரை தூங்க வைப்பதற்காக பாடும் பாடல் ஆகும்.
இளையராஜா சினிமாவிற்கு வரும்பொழுது தனது தாயின் பாடலைதான் முதல் பாடலாக பாட வேண்டும் என்று சிறு வயதிலேயே முடிவு செய்துவிட்டார் என்று கங்கை அமரன் கூறுகிறார்.