Tamil Cinema News
வேள்பாரிக்கு ஸ்க்ரிப்ட்லாம் எழுதிட்டேன்.. நடிகர்கள் பத்தி யோசிக்கல! – ஷங்கர் கொடுத்த மாஸ் அப்டேட்!
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில்மேன் தொடங்கி எந்திரன், 2.0 வரை இவரது படங்கள் அனைத்துமே பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் அதேசமயம் கலெக்சனிலும் சாதனை படைத்து விடுகின்றன. இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், இந்தியன் 3 என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார்.
இதற்கிடையே அவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்பட்டது. இந்த வேள்பாரி நாவல், கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு பிறகு தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதொரு நாவல் ஆகும். இதை சங்கர் மூன்று பாகமாக இயக்க உள்ளதாகவும், இதுகுறித்து முன்னணி நடிகர்களிடம் அவர் பேசி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வேள்பாரி குறித்து சங்கரே அப்டேட் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது ‘வேள்பாரி’ நாவலை படித்தேன். அப்போதே அதை மூன்று பாக படமாக எடுக்க வேண்டும் என திரைக்கதை வரை எழுதி வைத்துவிட்டேன். நடிகர்கள் குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
சங்கரின் இந்த அறிவிப்பால் விரைவில் மற்றுமொரு சரித்திர நாவலையும் திரைப்படமாக காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
