Special Articles
தமிழில் ஏலியன் தொடர்பாக வந்து பிரபலமடைந்த படங்கள்!.
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நிலையில் பெரியவர்கள், இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களை கவர்ந்திருக்கிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏலியன் தொடர்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அயலான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அயலான். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர்கள் நடித்திருப்பார்கள். வேற்று கிரகத்திலிருந்து ஏலியன் ஒன்று, பூமியில் இருக்கும் வில்லன் ஒருவன் பேராசை காரணமாக பூமியை அழிக்க பார்க்கிறான். இதை தடுப்பதற்காக அந்த ஏலியன் பூமிக்கு வந்து வில்லனிடம் இருக்கும் ஒரு பொருளை எடுத்துச் செல்வதற்காக வருகிறது.
வந்த இடத்தில் சிவகார்த்திகேயனுக்கும் ஏலியனுக்கும் சந்திப்பு ஏற்படுகிறது. மேலும் ஏலியன் வந்ததை தெரிந்துகொண்ட அந்த வில்லன் ஏலியனை பிடித்து ஆராய்ச்சி என்ற பெயரில் சித்திரவதை செய்கிறான். அந்த வில்லனிடமிருந்து ஏலியனை கதாநாயகன் எவ்வாறு காப்பாற்றி அதன் கிரகத்திற்கு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அப்புச்சி கிராமம்

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பிரவீன் குமார், அனுஷா நாயக் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் அப்புச்சி கிராமம் என்னும் ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். விண்ணிலிருந்து பூமியை நோக்கி பல விண்கற்கள் விழ போவதை முன்னரே அறிவியலாளர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.
இதில் பெரிய கல் ஒன்று அப்புச்சி என்னும் கிராமத்தில் விழப் போகிறது என்ற தகவல் அப்புச்சி கிராம மக்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அந்த கிராமத்தில் சண்டையிட்டு கொண்டவர்கள், கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர்கள் என அனைவரும் ஒன்று சேர்கிறார்கள்.
மேலும் இந்த கிராமத்தில் இது போன்ற பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் இது குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விண்கற்கள் தங்கள் கிராமத்தின் மீது விழுந்தாலும் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம் என கிராம மக்கள் ஒரு சிலர் அந்த கிராமத்திலேயே தங்கி விடுகிறார்கள். இறுதியாக அந்த கிராமத்தின் மீது எரிகற்கள் விழுந்ததா? கடைசியாக கதாநாயகனும், கதாநாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை.
கேப்டன்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த படத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், கோகுல் ஆனந்த் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் ஆர்யா ராணுவத்தில் பணியாற்றும் கேப்டனாக இருக்கிறார். சீனா, நேபாளம் எல்லைப் பகுதியில் உள்ள செக்டர் 42 என்ற இடத்தை மக்களுக்காக அரசு திறந்து விட முடிவு செய்கிறது. எனவே அதை ஆராய்ச்சி செய்வதற்காக ராணுவத்தை அரசு அங்கு அனுப்புகிறது. ஆனால் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்யச் சென்ற ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.
இதனால் ஆர்யாவின் தலைமையில் ஒரு குழு அந்த இடத்தை ஆராய்ச்சி செய்ய போகிறது. ஆர்யா குழுவில் உள்ள ஹரிஷ் உத்தமன் தன் குழுவினரை தாக்கிவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்கிறார்.
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிம்ரன் தலைமையிலான மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி குழு அங்கு செல்ல திட்டமிடுகிறது. அதற்காக ஆர்யா குழுவினரை இவர்கள் அழைக்கிறார்கள்.
அங்கு சென்றதும் ஓர் மர்மமான உயிரினம் தான் கொலை செய்கிறது என அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அதை அழித்தார்களா? எவ்வாறு அழித்தார்கள்? என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.
சூப்பர் டீலக்ஸ்

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, மிஸ்கின், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஒவ்வொருவரின் மாறுபட்ட கதைகள் இறுதியாக ஒரே புள்ளியில் எவ்வாறு சேருகிறது என்பது தான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் மிருணாளினி ரவி கதாபாத்திரம் வேற்றுகிரகவாசியாக வெளிப்படும். இந்த படத்தில் வேற்றுகிரகவாசியாக அவர் நடித்திருப்பது படத்திற்கு மற்றொரு திருப்பமாக அமையும். மேலும் வேற்று கிரகவாசியாக அவர் நடித்து படத்தில் கூற வரும் கருத்து படத்திற்கு எவ்வாறு திருப்புமுனையாக அமைகிறது என்பது இந்த படத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
கலையரசி

1963 ஆம் ஆண்டு எம்ஜிஆர், நம்பியார், பானுமதி பி எஸ் வீரப்பா, ராஜ ஸ்ரீ, சச்சு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இது வேற்று கிரகவாசிகளை கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் நேர்மையான விவசாயம் செய்யும் தொழிலாளியாக கிராமத்தில் எம்ஜிஆர் வாழ்கிறார். அந்த கிராமத்தைச் சேர்ந்த பணக்கார வீட்டு பெண்ணாக வாணி என்ற கதாபாத்திரத்தில் பானுமதி இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. இவ்வாறு இருக்கையில் விண்வெளியில் இருந்து ஒரு பறக்கும் தட்டு பூமியை நோக்கி வருகிறது.
இவ்வாறு விண்வெளியில் இருந்து பறக்கும் தட்டில் வந்தவார்களாக நம்பியாரும் அவரின் உதவியாளரும் காட்டப்படுகிறார்கள். வேற்று கிரகவாசியான அவர்களுடைய கிரகம் தொழில்நுட்பத்தில் நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். ஆனால் நடனம் மற்றும் கலையில் அவர்கள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. எனவே பூமியிலிருந்து நல்ல கலைஞாணம் கொண்ட மனிதர்களை கடத்திச் செல்லும் நோக்கில் நம்பியார் தன் உதவியாளருடன் பறக்கும் தட்டில் வந்து இறங்கி இருப்பார்.
கலைஞாணம் கொண்ட பெண்ணாக இருக்கும் பானுமதியை அவர்கள் தங்கள் வேற்று கிரகத்திற்கு கடத்திச் செல்வார்கள். இதை அறிந்து எம்ஜிஆர் எப்படி விண்ணுலகம் சென்று தன் காதலியை மீட்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதையாக அமைகிறது
