மீண்டும் அவெஞ்சர்ஸில் டோனி ஸ்டார்க்? – கொண்டாட்டத்தில் மார்வெல் ரசிகர்கள்!

மார்வெல் சூப்பர்ஹீரோக்களில் பிரபலமான அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் மீண்டும் படங்களில் தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான பல சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று புகழ்பெற்றுள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். 2008ல் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கடந்த 14 ஆண்டுகளாக 35க்கும் மேற்பட்ட சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், வெப் சிரிஸை வெளியிட்டுள்ளது.

ஏராளமான மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ள சூப்பர்ஹீரோ அயர்ன்மேன். டோனி ஸ்டார்க் என்னும் பெரும் பணக்காரரான இவர் இரும்பு கவசம் அணிந்து சூப்பர்ஹீரோவாக தோன்றும்போது திரையரங்குகளில் விசில் பறக்கும். மார்வெலில் கடந்த 14 ஆண்டுகளாக ராபர்ட் டோனி ஜூனியர் அயர்ன் மேனாக நடித்து வந்தார்.

மார்வெலின் முந்தைய அவெஞ்சர்ஸ்;எண்ட் கேம் படத்தில் தானோஸுடனான யுத்தத்தில் அயர்ன்மேன் இன்பினிட்டி கற்களை பயன்படுத்தி தானோஸை அழிப்பதுடன், தானும் உயிரை விட்டு மக்களை காப்பாற்றினார். அயர்ன்மேனின் இழப்பு மார்வெல் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அடுத்தடுத்த படங்களில் கேமியோ ரோலிலாவது அயர்ன்மேன் தோன்ற மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் மார்வெலில் அடுத்த சில வருடங்களில் வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் படத்தில் அயர்ன்மேனாக ராபர்ட் டோனி ஜூனியர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே ’ஆர்மர் வார்ஸ்’ தொடரிலும் அவர் சில நிமிட காட்சிகளில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது. இந்த செய்தி மார்வெல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Refresh