Cinema History
சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.
Super Good Films : 1990களில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அதன் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரிதான் படங்களுக்கான கதைகளை தேர்ந்தெடுப்பார்
ஒரு திரைப்படத்திற்கான கதையையும் அந்த கதைக்கான கதாநாயகனையும் அவரே முடிவு செய்வார். அப்படி அவர் முடிவு செய்யும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கண்டிருக்கின்றன.
இந்த நிலையில்தான் இயக்குனர் எழில் ஒரு கதையை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது இருந்த டாப் நடிகர்கள் வரை குறைந்த வரவேற்பு பெற்ற நடிகர்கள் வரை யாருமே அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அந்த கதை ஆர்.பி சௌத்ரியிடம் வந்தது. எழில் அந்த கதையை கொண்டு செல்வதற்கு முன்பு ஒரு பெரிய கதாநாயகனுக்கு ஏற்றார் போல சில சண்டை காட்சிகள் எல்லாம் வைத்து அந்த கதையை மாற்றி அமைத்து இருந்தார். அந்த கதையை ஆர்.பி சௌத்ரி கேட்ட பொழுது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
இந்த திரைப்படத்தில் முரளியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பது ஆர்.பி சௌத்ரியின் எண்ணமாக இருந்தது. எனவே எழிலிடம் கதையை முதலில் முரளியிடம் கூறுங்கள் அவர் அதற்கு ஒப்புக் கொண்டால் அடுத்து நாம் படபிடிப்பை துவங்கலாம் என்று கூறினார்.

உடனே எழிலும் அந்த கதையை முரளியிடம் கூறினார் ஆனால் முரளிக்கும் அந்த கதை பிடிக்கவில்லை. எனவே அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது ஆர்.பி சௌத்ரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விட்டது.
ஏனெனில் பொதுவாக ஆர்.பி சௌத்ரி ஒரு கதையை பரிந்துரைக்கிறார் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிகர்கள் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால் முரளி அப்படி செய்யாமல் விட்டது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த கதையை விஜய்யிடம் சென்று கூறினார்.
விஜய் உடனே அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்ள துள்ளாத மனமும் துள்ளும் என்கிற அந்த திரைப்படம் தயாரானது. ஒருவேளை அந்த திரைப்படத்தில் முரளி நடித்திருந்தால் அவருக்கு அது பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கும்.
