Connect with us

பொன்னியின் செல்வன் – விரிவான திரைப்பட விமர்சனம்

Movie Reviews

பொன்னியின் செல்வன் – விரிவான திரைப்பட விமர்சனம்

Social Media Bar

கடந்த 70 வருடங்களாக தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் கமல்ஹாசன் என பலரும் படமாக எடுக்க நினைத்தும் முடியாமல், தற்சமயம் இயக்குனர் மணி ரத்னம் மூலமாக சாத்தியமாகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

படத்தை துவங்கும்போதே இது முழுக்க முழுக்க நாவலை வைத்தே எடுக்கப்படவில்லை. திரைப்படத்திற்கு தகுந்தவாறு சில காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன என ஒரு அறிவிப்பை வைத்த பின்னரே படம் துவங்குகிறது. பொன்னியின் செல்வன் வாசக விரும்பிகள் பலரும் படம் நாவலை போலவே வந்திருக்கிறதா? என்கிற ஐயத்தில் இருந்தார். அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பதில் சொல்லி படத்தை துவங்குகிறார் மணிரத்னம்.

வந்தியதேவன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை பெண்களிடம் கடலை போடும் கதாபாத்திரம். அதே சமயம் எந்த ஒரு விஷயத்தையும் அறிவுடன், புத்திசாலித்தனமாக அனுகும் கதாபாத்திரம். அது மிக இயல்பாகவே நடிகர் கார்த்திக்கு ஒத்து போயிருந்தது. ஐஸ்வர்யா ராய் அவருக்கு கொடுக்கப்பட்ட நந்தினி கதாபாத்திரத்தையும் சிறப்பாகவே செய்திருந்தார். சொல்ல போனால் இந்த ஒட்டு மொத்த படத்தின் நாயகி நந்தினிதான் என்பதை படத்தை பார்க்கும்போது அறிய முடிகிறது.

ராஜ மெளலி திரைப்படங்களில் வருவது போன்ற பிரமாண்டங்கள் எதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை. சண்டை காட்சிகளும் கூட இயல்பான அளவிலேயே அமைக்கப்பட்டிருந்தன. எனவே பிரமாண்டத்தை எதிர்ப்பார்த்து செல்வோருக்கு இந்த படம் ஏமாற்றத்தை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆதித்த கரிகாலனாக விக்ரம் செமையாக பொறுந்தியிருந்தார். குந்தவை கதாபாத்திரமான த்ரிஷா வரும்போது எல்லாம் அவருக்கென்று ஒரு தனித்துவ இசையை அமைத்து குந்தவை கதாபாத்திரத்தை மாஸ் ஆக்குகிறார் ஏ.ஆர் ரஹ்மான்.

படத்தில் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த தமிழகத்தை காட்ட ரொம்பவே மெனக்கட்டுள்ளார் தோட்டா தரணி. ஆனால் இதுவரை சோழ சாம்ராஜ்யம் என கேள்விப்பட்டதோடு படத்தில் காட்டியுள்ளதை ஒப்பிட முடியவில்லை. 10,000 யானைகளை கொண்ட சோழ சாம்ராஜ்யம் என நாம் கேள்விப்பட்ட அளவில் சோழ சாம்ராஜ்யம் காட்டப்படவில்லை. 

படத்தில் பளுவேட்டரையர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே தலைமுறை தலைமுறையாக இருக்கும் நட்பு குறித்து பெரிதாக விளக்கப்படவில்லை என்பதால் புத்தகம் படிக்காமல் படத்தை பார்ப்பவர்களுக்கு அந்த விஷயங்கள் புரியாமல் போகலாம்.

அதே போல பெரிய பளுவேட்டரையருக்கும், சிறிய பளுவேட்டரையருக்கும் இடையே இருக்கும் உறவு, பாசம் குறித்தும் விரிவாக பேசப்படவில்லை. படத்திற்கு நேரம் பத்தவில்லை என்றே கூற வேண்டும். படம் துவக்கம் முதல் இறுதி வரை பெரும் ஓட்டத்துடன் செல்கிறது. கல்கியின் நாவலை இரண்டு பாக படத்திற்குள் அடக்குவது கடினமான விஷயமே. இத்தணைக்கும் நாவலில் இருந்த பாதி காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. ஆனாலும் கூட இயக்குனருக்கு நேரம் போதவில்லை.

குந்தவைக்கும், வந்திய தேவனுக்கும் இடையேயான காதல் காட்சி என்பது படத்தில் மொத்தமே ஒருமுறைதான் வருகிறது. ஆனால் அதை மிகவும் சுவை மிக்க தருணமாக மாற்றியுள்ளார் இயக்குனர்.

கதைப்படி, ஆதித்த கரிகாலன் அரசரின் ஆணைக்கு கீழ் படியாதவர், அருள்மொழி வர்மனோ அரசன் எந்த கட்டளை இட்டாலும், அது சரியோ தவறோ அதை அப்படியே ஏற்று நடப்பவர். ஆனால் மூவரில் குந்தவை மட்டுமே ராஜ்ஜியம் மற்றும் மக்கள் குறித்து யோசிப்பவராக இருக்கிறார். எனவே குந்தவைதான் சோழ ராஜ்ஜியத்தின் மாஸ்டர் மைண்ட் எனலாம்.

ஏ.ஆர் ரஹ்மானின் இசை தாருமாறாக இருந்தது. படத்தில் சோழா சோழா, பொன்னி நதி பார்க்கணுமே ஆகிய இரண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட் அடித்த நிலையில் கடவுள்களுக்கான பாடல்களாக முருகனுக்கு தேவராள் ஆட்டமும், கிருஷ்ணனுக்கு ராட்சச மாமா பாடலும் திரையரங்கில் கேட்க அருமையாக இருந்தது.

மொத்தமாக பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் பார்ப்பவர்களுக்கு ஒரு திருப்தியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. படம் முடிந்த பிறகு பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் உங்கள் மனதிற்குள் பயணித்தால் அதுவே படம் உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கமாக இருக்கும்.

Bigg Boss Update

To Top