ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சி – ஃபால் திரைப்பட விமர்சனம்

சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட்டில் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட திரைப்படம்தான் ஃபால். இதுவரை வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் மாறுப்பட்ட கதைக்களத்தை கொண்ட ஒரு சிறப்பான திரைப்படம் என இதை கூறலாம்.

முதலில் படத்தின் கதையை பார்க்கலாம்.

படத்தின் கதை

படத்தின் முதல் காட்சியிலேயே பெக்கி அவளின் காதலன் மற்றும் ஹண்டர் என்கிற அவளின் தோழி மூவரும் மலை ஏறுகின்றனர். மலை ஏற்றம் என்பது அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். ஏனெனில் பலருக்கும் அட்வெஞ்சரான விஷயங்கள் பிடிப்பதுண்டு.

ஆனால் அந்த மலை ஏற்றத்தில் தவறுதலாக கைதவறி கீழே விழும் பெக்கியின் காதலன் அங்கேயே இறக்கிறார்.

இதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் கூட பெக்கியால் தனது காதலனின் நினைவுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எனவே தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு உயிரை மாய்த்து கொள்ளலாம் என யோசிக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் அங்கே வரும் அவரின் தோழி ஹண்டர் அமெரிக்காவிலேயே மிக உயரமான டவர் ஒன்றில் ஏறுவதற்கு பெக்கியை வற்புறுத்துகிறார்.

தற்கொலைக்கு செய்துக்கொள்வது என முடிவாகிவிட்டது. இனி எங்கு சென்று தற்கொலை செய்தால் என்ன? சாவுதான் முக்கியம் பிகிலு. என தன் தோழியுடன் ரேடியோ டவரில் ஏற கிளம்புகிறார் பெக்கி. ஆள் அரவமற்ற ஒரு ஏரியாவில் கவனிப்பாரற்று பாதி சேதமடைந்து நிற்கும் அந்த டவர் மொத்தம் 2000 அடி உயரம் கொண்டது. 1800 அடிக்கு உட்புற ஏணியையும், 200 அடிக்கு வெளிப்புற ஏணியையும் கொண்டுள்ள அந்த டவரில் இருவரும் ஏற துவங்குகின்றனர்.

தன் காதலன் இறந்ததால் உயரத்தை கண்டால் பயப்படும் நிலைக்கு செல்லும் பெக்கி, இந்த டவர் ஏற்றத்தின் மூலம் அதை சரி செய்துக்கொள்ள நினைக்கிறார். உயரத்திற்கு சென்ற இருவரும் பல்வேறு சர்க்கஸ் வேலைகளை காட்டி அதை இன்ஸ்டாகிராமில் போடுவதற்காக பதிவு செய்துகொள்கின்றனர்.

சரி திரும்ப செல்லலாம் என அவர்கள் இறங்க நினைக்கும் தருவாயில் உச்சியில் இருந்து கீழே செல்ல உதவும் 200 அடி ஏணியானது மல மலவென உடைந்து கீழே விழுகிறது. இருவரும் 2000 அடி உயரம் கொண்ட டவரின் உச்சியில் மாட்டிக்கொள்கின்றனர். அங்கு செல்போன் சிக்னலும் இல்லை. கையில் ஒரு வாட்டர் கேன் தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அவர்கள் உயிரோடு வீடு திரும்புவார்களா என்பதே கதை.

இந்த மொத்த படத்தில் கதாநாயகி என்றால் பெக்கிதான். பொதுவாக ஹாலிவுட் படங்களில் இறுதிவரை யார் சாகவில்லையோ அவர்கள்தான் கதையின் நாயகர்கள். ஆனால் படத்தின் கேமிரா வேலைகள் அதிரி புதிரியாக இருந்தது என்றே கூறலாம்.

பார்வையாளர்களான நாமே 2000 அடி உயரத்தில் மாட்டிக்கொண்டது போன்ற பிரமையை நமக்கு ஏற்படுத்தும் வகையில் படத்தில் ஷாட்கள் இருந்தன. ஒரு நிமிசம் அப்படியே தலை சுத்திடுச்சி என நம்மை கண்டிப்பான எண்ண வைத்துவிடும்.

மொத்தத்தில் இதயம் பலவீனமானவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதை ஒரு ஃபீல் குட் மூவி என கூறிவிட முடியாது. ஆனால் இது ஒரு நல்ல படம்

Refresh