மீண்டும் வந்த ப்ளாக் பாந்தர்? எப்படி இருக்கு படம்? – வகாண்டா ஃபாரெவர் விமர்சனம்!

தொடர்ந்து சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஆண்டில் மொத்தம் 4 படங்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டின் கடைசி படம்தான் ‘ப்ளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்’

முன்னதாக வெளியான ‘ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம்’ பெரும் ஹிட் அடித்தது. அடுத்து வெளியான ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்’, ‘தோர்; லவ் அண்ட் தண்டர்’ உள்ளிட்ட படங்கள் நன்றாக ஓடினாலும் சமீப காலமாக தொடர்ந்து காமெடி படமாக வெளியிட்டு வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிருப்தியை போக்கும் வகையில் முழுக்க சீரியஸ் ஆக்‌ஷன் படமாக வெளியாகியுள்ளது ‘வகாண்டா ஃபாரெவர்’

வகாண்டா நாட்டின் அரசனும், தற்கால ப்ளாக் பாந்தருமான டி சாலா புற்றுநோய் வந்து இறந்து போகிறார். ப்ளாக் பாந்தர் இல்லாததால் உலக நாடுகள் வகாண்டாவிடம் உள்ள அதிசயமான வைப்ரேனியத்தை திருட முயல்கிறார்கள். அதனால் மகாராணி பொறுப்பை ஏற்கும் டி சாலாவின் தாய் டோராமிலாஜெ படையை கொண்டு அவர்களை முறியடிக்கிறார்.

அதேசமயம் வகாண்டாவை தாண்டி வேறு எங்கும் வைப்ரேனியம் கிடைக்குமா என உலக நாடுகள் தேட, கடலுக்குள் வைப்ரேனியம் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அவர்களை கடலுக்குள் வாழும் அதிசய மனிதர்கள் தாக்கி கொல்கிறார்கள். இதை வகாண்டா செய்ததாக உலக நாடுகள் சந்தேகம் கொள்கிறது. அப்போது கடலில் வாழும் அதிசய மனிதர்களின் தலைவனான ‘கு கில் கான்’ என்னும் நமோர் தங்களை பற்றிய ரகசியத்தை உலக நாடுகளுக்கு சொல்லக் கூடாது என வகாண்டாவிடம் கோரிக்கை வைக்கிறான்.

அதோடு மட்டுமல்லாம் உலக நாடுகள் அனைத்தையும் தாக்க அவன் திட்டமிடுகிறான். இதற்கு காரணம் அவனுடைய மூதாதையர்கள் நிலத்தில் பழங்குடிகளாக வாழ்ந்தபோது அவர்கள் மீது ஐரோப்பிய நாடுகள் நடத்திய கொடுமைகள்தான். அவனது இந்த திட்டத்தை வகாண்டா எதிர்க்க அதனால் வகாண்டாவை தாக்கி மகாராணியை கொல்கிறான் நமோர்.

அரசனும் இல்லாமல், ப்ளாக் பாந்தரும் இல்லாமல் நிர்கதியான வகாண்டா மீண்டு எழுந்ததா? அடுத்த ப்ளாக் பாந்தர் யார்? நமோரை ப்ளாக் பாந்தர் வெற்றிக் கொண்டாரா? என்பது சுவாரஸ்யமான சீரியஸ் ஆக்‌ஷன் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தில் ப்ளாக் பாந்தராக நடித்த சாட்விக் போஸ்மேன் உண்மையாகவே புற்றுநோயால் இறந்துவிட்டதால் இந்த இரண்டாம் பாகம் எப்படி உருவாக போகிறது என்ற கேள்வி இருந்தது. அதை நேர்த்தியாக கையாண்டு படத்தை தயாரித்துள்ளார்கள். சாட்விக் போஸ்மேனுக்கான ட்ரிப்யூட் காட்சிகளில் ரசிகர்கள் மௌன அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதியாக இருந்ததை காண முடிந்தது.

படம் முழுவதும் நமோர் தவிர அதிகமான பெண்களும், கறுப்பின மக்களும் நிறைந்துள்ள படம் இது. மார்வெல் படங்களிலேயே மிகவும் குறைவான பட்ஜெட்டில் (250 மில்லியன்) எடுக்கப்பட்டிருந்தாலும், கிராபிக்ஸ், ஆக்‌ஷன் காட்சிகளில் பிரம்மாண்டத்திற்கு எந்த குறைவும் இல்லாமல் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

நமோரின் முன்னோர்கள் கதை வழியாக லத்தீன் அமெரிக்காவின் இன்கா பழங்குடி மக்களுக்கு ஸ்பானியர்கள் நடத்திய படுகொலை சம்பவங்களை ரீக்ரியேட் செய்துள்ளனர். மார்வெல் ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், புதிதாக பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடிப்பதாகவும், கடினமாகவும் இருக்கலாம்.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh